புதன், 31 ஜூலை, 2013

வர்ணங்கள்

ஏ! வண்ணங்களே
உங்களையும்
விட்டு வைக்கவில்லை
இந்த அற்ப மனிதர்கள்!
தங்களின்
கவிதை நடைக்கு
உங்களுக்குள்ளும்
பிரிவினையை
உண்டு செய்தான்!!

காற்று

உன் மனதினில் நிரந்தர இடத்தினில்
நான் குடியிருக்க  உன்னை நீயோ
ஏமாற்றிக்கொண்டே  இருக்கிறாய்!

மனமும், வயதும்

உன்னைக் கடக்க நானும்
என்னை அழித்திட நீயும்
முயன்றுகொண்டே இருக்கிறோம்
விடைதான் இன்னும் கிடைக்கவில்லை!
மனமும், வயதும்

விதை

ஒரு முறை செத்து
மீண்டும் துளிர்த்துவந்தேன்
உன்னில் மாற்றம் வருமென்று
ஆனால் நீயோ என்னை
மீண்டும் மீண்டும்
செத்து செத்து வாழச் சொல்கிறாய்!

எச்சம்

உன் இழி செயலை
நினைக்கும்போது
மனம் ஏனோ கனக்கிறது
உன்னை நினைக்கையில்
என்னுள் எனக்கே தெரியாமல்
ஒரு மன அழுத்தம்
ஏன்?
உன் ஜாதியின் எச்சத்தில்
அல்லவா நானும்
ஜனித்துள்ளேன்.

ஈரம்

சில்லென்ற காற்றின்
ஈரம் காயுமுன்
மனதின் ஈரத்தைக்
காய விட்டுவிடாதே
மிக சிறிதேனும்
மிச்சமிருக்கட்டும்
வரும் சந்ததியினருக்கு
எடுத்துக்காட்டுவதற்கு!

மரபாச்சி பொம்மை

மரபாச்சி பொம்மையுடன்
விளையாட ஆசை
சிறு பிள்ளையாய்!
நாளை நானும்
மரபாச்சி பொம்மையாக்கப்
படுவேனென்று தெரியாமல்!!

பாவம்பா கோழி

எனக்கு இரை கிடைக்குமென்றெண்ணி
உன் வீட்டுப்பக்கம் ஒதுங்கிவிட்டேன்
இன்று ஞாயிரென்று அறியாமல்

  பாவம்பா கோழி

என்ன விலை அழகே

என்ன விலை அழகே
உன் சிரிப்புகென்ன விலை
என்ன விலை அழகே
உன் அழகுக்கென்ன விலை
என்ன விலை அழகே
உன் தாய்மைக்கென்ன விலை
என்ன விலை அழகே
உன் மனிதத்துக்கென்ன விலை
என்ன விலை அழகே
என்ன விலை குடுத்தேனும்
வாங்க முடியுமோ உன்னை
நித்தம் வந்து என் நினைவில்
என்னை கொல்கிறாய்
உந்தன் அழகுக்கொன்றும் ஈடில்லையே

அவள்

அவளை கொஞ்சம்
சிரிக்க விடுங்கள்
அவள் வாய்
வலிக்கும் வரை
சிரிக்கட்டும்!

நேற்று எங்களை
அடக்கமற்ற சிரிப்பு
என்றடிக்கிய
பெருமான்களே
நாளையே கூட
அவள் சிரிக்க
மறந்துவிடலாம்
உங்களின்
அர்த்தமற்ற அடக்குதலில்!

அவளை கொஞ்சம்
சிரிக்க விடுங்கள்
அவள் கண்கள்
நீர் சொரியும்வரை
சிரிக்கட்டும்!

திருநங்கை

மெல்லத் திறந்த
கதவொன்று
அழுத்தமாய்
சாத்தப்பட்டது
என்னைப்
பார்த்த நொடியில்!

மனம்

என் மேனி
கருத்து
சிறுத்திருந்தாலும்
என் மனம்
என்னவோ
பெருத்து
வெண்மையாய்!!

பிம்பம்

       

என் இரு விழிகள்
மெல்லத் திறந்து
உன் முகம்
நினைந்திட
நினைக்கையில்
நீரில் அலைந்து
திரியும் பிம்பமாய்
உன் முகம்!
இன்னும் சற்றே
நினைவலைகளைத்
தட்டியெழுப்பி
பார்க்க எத்தனிக்கையில்
பல நாட்கள்
நீயின்றி
தலையணை
நனைந்த
என் முகமே
தெரிகின்றது!!