ஞாயிறு, 25 மே, 2014

காலமும், காலனும்

எனைப் பார்த்து
உன்னை நீயே..
உருக்கிக்கொள்ளவல்ல
என் பயணம்....
எனைப் பார்த்து
உன்னை
செதுக்கிக்கொள்ளவே...


அகந்தையில்லா அகம்

நீ நினைக்கும்
பிம்பமல்ல நான்.....
நான் இருந்திட
நினைக்கும் பிம்பமுமல்ல...
நான் நானாய் மட்டுமே.
அகந்தையற்ற அகமாய்...

தனிமை

உன்னுடனிருந்த தருணங்களின்
தனிமையின் நீளமும், அடர்த்தியும்...
என் தனிமையில் நான் கண்டிலேன்....
பாதையினூடே குப்பைகள்...
இழுப்பதென்னவோ நான்...
என்னைப் போன்றே
சூழல்களைக் கடந்து...
சலனமற்றதாய்
உனைக் கண்டிடவே...
புரியாத சருகுகள்
சறுக்கினால்...
நதி என் செய்யும்
சலனமற்றதாய்!!
பெண்ணின் மனத்தைக்
கொள்ளைக் கொள்ளவிழையாது...
அவள்மீதான உன் புணருதலின்
எண்ணிக்கையை மட்டுமே..
உயர்த்தியபடியே இருத்தல்..
ஆண்மைக்கழகில்லை
என்றியம்பவும் வேண்டுமோ?
இதைக் கூறும் பெண்மை
நிமிர்ந்ததென்றுரைக்கவும் வேண்டுமோ?

தன்னம்பிக்கை

தெளிவுறும் கணங்களின்
சில மணித் துளிகளின்
மரண வலிகளை தவிர்க்காது...
பயணப்படும் பயணங்களின்
முடிவில் மரணித்துவிடுகிறது
எந்தன் பயம்....
இன்னும் சற்றே பயணப்பட
முற்படுகையில்...
இன்னும் சற்றே அழுத்தமாய்
பயம் வந்தடைந்து...
முடிவில் மரணித்துவிடுகிறது
தெளிவின்மை...
பயந்து பயந்தே
சென்றடையும் பாதையின்
முடிவில் மரணித்து...
மீண்டும் ஜனிக்கிறேன்
புத்தம்புது பூவாய்...
தன்னம்பிக்கையுடன்...

தோழமை

மெதுவாய் நகரும்
கடிகார மணித்துளிகளின்
சத்தங்களுக்கிடையே
மெல்லிய கவிதையாய்
உன்னுடனான என் பயணம்...
ஒவ்வொரு முறையும்
உன்னைக் கொஞ்சம்
கட்டிக்கொள்ளவா,
முத்தமிட்டுக் கொள்ளவா,
என்று லாவகமாய்
உன் அன்பின் தோழமையை
வெளியிடும் தருணத்திற்காய்
நீ ஒவ்வொரு முறையும்
சிறு குழந்தையாய்,
தவழ்ந்து, தவழ்ந்துக்
காத்திருக்கையில்
என் தோழனாய்,
என் தமையனாய்,
ஏன் என் பிள்ளையாயும்
பரிமளித்தாயடா....
என் உயிரிலும் கலந்திட்ட
உன் தோழமை உணர்வு...
உன்னுடனான என் பயணத்தின்
ஆரம்பப் புள்ளியின்
அரிச்சுவடியை
நானும் கவனமாய்ப்
புரட்டிப், புரட்டிப்
பார்கின்றேன் என்றேனும்
உன் முத்தத்தின் ஈரமும்,
உன் அணைப்பின் கதகதப்பும்
எக்கனமேனும் என்னைச்
சலனப்படுதியதா
என்றெனும் கேள்வியுடன்...
பதில் கிடைத்ததென்னவோ
ஒரு குழந்தையின் முகமும்,
ஒரு தாயின் மனமும் மட்டுமே...
வா மீண்டும், மீண்டும்
அணைத்து, அணைத்து
விளையாடலாம்.....